Published Date: February 28, 2025
CATEGORY: CONSTITUENCY

மதுரை:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழகத்தில் 25 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் தளபதி பூமிநாதன், ஆட்சியர் சங்கீதா, மேயர் இந்திராணி, மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஸ் குமார், மாநகராட்சி ஆணையர் சித்ரா, மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் செல்வராணி மற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் டீன் அருள் சுந்தரேஷ்குமார் கூறியதாவது: ஏற்கனவே படுகை வசதிகளுடன் போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் இயங்கி வந்தது. இப்போது மேலும் 20 படுகை வசதிகளுடன் இச்சிகிச்சை மையம் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக செவிலியர் மனநல ஆலோசகர் மனநலம் சார்ந்த சமூக பணியாளர் மற்றும் 3 பல்நோக்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெண்கள், சிறார்களுக்கு தனித்தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு குழு சிகிச்சை, யோகா சிகிச்சை, குடும்ப நல ஆலோசனை மற்றும் தனிநபர் ஆலோசனை வழங்கப்படும். கேரம்போர்டு, சதுரங்கம், தொலைக்காட்சி வசதி அமைக்கப்பட்டுள்ளது. மது, புகைப்பிடித்தல், புகையிலை பொருட்களை பயன்படுத்துதல் கஞ்சா, போதை மாத்திரை, சமூக வலைதள விளையாட்டுகளுக்கு அடிமையாக இருத்தல் உள்ளிட்ட அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படும். உள்நோயாளிகளுக்கு மூன்று வேலை உணவு அளிக்கப்படும். மனநலத்துறை தலைவர் கீதாஞ்சலி தலைமையில் குழு மருத்துவர்கள் அமுதா, கிருபாகரகிருஷ்ணன் மற்றும் செவிலியர்கள் மனநல ஆலோசகர்கள், சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து சிகிச்சை அளிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவ கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமை வகித்தார். மனநல மருத்துவர் உமாதேவி வரவேற்றார். ஆர்.சச்சிதானந்தம், எம்.பி., இ.பி செந்தில்குமார் எம்.எல்.ஏ ஆகியோர் மையத்தை பார்வையிட்டனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், மேயர் இளமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Media: Hindu Tamil